Friday, September 23, 2011

ஜெ.ஜெ சில குறிப்புகள் - 4


புலி என்மேல் பாய்வதற்கும் நான் விழிப்பதற்கும் சரியாக இருந்தது.
புலி பூனையின் குரலில் மிமிக்கிரி செய்கிறதோ என்று ஒரு கணம் சந்தேகம் வந்து பிறகு அது
பூனை மட்டுமே என்ற நம்பிக்கை வந்ததும் எழுந்து அமர்ந்தேன்.

நடுநிசி விழிப்பு அடிக்கடி நிகழ்வதில்லை என்றாலும் அபூர்வமாக நிகழும் இது போன்ற கனவுகளினால்
மீண்டும் உறக்கம் பிடிக்க அதிகாலை வரை கூட ஆகும்.
நேரம் ஓன்றை நெருங்கி கொண்டிருந்தது.

கனவில் நிலவற்ற அடர் காடு. இது எதை குறிக்கும். குழப்பத்தை குறிக்கிறதா.
மின்மினிகளை எண்ணிக்கொண்டிருந்தது எதை குறித்திருக்கும்?

இரண்டு பெரிய மின்மினிகள் பறக்காமல் ஒரே இடத்தில். இது?

அது ஒரு புலியின் கண்கள் என ஆனதும் அது துரத்தியதும் எதை உருவகமாக்கப்பட்டிருந்ததோ.
வெளியிருந்து சன்னமாக நிசப்தமான அறையை நோக்கி மெல்லி ஒலி படர்ந்து கொண்டிருந்தது.
புலியை போல உறுமத்தெரியாத ஒரு பூனையின் குரல். பூனை, புலி இரண்டிற்கும்
சம்பந்தமிருக்குமோ.

புலி பசித்தாலும் புல்லை தின்னாத ஊனுண்ணி.
பூனையும் ஊனுண்ணிதான். இரை சிக்காத போது திருட்டு பால் குடிக்கும் இரகம்.

புலி பிடிவாதத்தின் சின்னம், பூனை பிடி தளர்வின் வடிவம்.

இரண்டு நாட்களாக பூட்டியிருந்த ஆறாவது இராமசாமியின் அறைப்பக்கத்திலிருந்தே பூனையின் அலறல் கேட்டுக்கொண்டிருந்தது.

இன்றும் பூனைக்கு இராமசாமியிடமிருந்து படியளக்கப்படவில்லை போலும்...
தந்தை பெரியார் இராமசாமி, சுந்தர இராமசாமி டிராபிக் இராமசாமி, துக்ளக்
சோ. இராமசாமி, விகே ராமசாமி ஆகியோர்களுக்கு பிறகு எனக்கு தெரிந்த
ஆறாவது இராமசாமி என்பதால் ஆறாவது ராமசாமி அல்ல.

பெயரே ஆறாவது இராமசாமிதான். 5 குழந்தைகள் பிறந்த சில மாதங்களில் இறந்து
போன பின் ஆறாவதாக பிறந்ததால் ஆறாவது இராமசாமி என்பது அவரது பெயர்
புராணம பாடினார் ஒருமுறை.

இந்த வயதிலும் மேன்சன்காரர் என்பதால் அவர் அநேகமாக திருமணமாகதவர், அல்லது மனைவி மக்களை விபத்தில்
பறிகொடுத்தவராக இருக்க வேண்டும், அதைக்கேட்டுத்தெரிந்துகொள்ளுமளவு பொறுமையிருந்தது இல்லை.

வார இறுதியில் குடியும், அறைக்கு வாடகையும்,அவரும், பூனையும் போதிய போஜனம்
செய்வதால் நிச்சயம் அவர் எதாவது தொழில் அல்லது பணியில்தான் இருந்திருக்க வேண்டும் என்பதும் எனது கண்டுபிடிப்புகள்.

அதிக பழக்கமில்லை அவருடன். அறைக்கு வந்த புதியதில் சாதாரணமான
விசாரிப்புகள். பிறகு சனி இரவானால் சில சமயம் போதனை, உபதேசங்களிருக்கும்.
ஒரு முறை அறையில் டிவிடி பொறி இருப்பதை கண்டு சில படங்களுக்கான
குறுந்தகட்டை கேட்டு வந்தார். அவர் விரும்பிய தகடு இல்லை போலும்.
சார், வேற ஆங்கிலபடம் இருக்கா? என எல்லா தகடுகளையும் பார்த்த பின்பும்
இரண்டு, மூன்று முறை கேட்ட போதே புரிந்து போனது.

தம்பி அந்த மாதிரி படங்களெல்லாம் பார்க்க மாட்டிங்களா என்ற அவரின்
கேள்விக்கு இல்லை என்பதை விட புன்னகை நேர்மையான பதிலாக எனக்கு
தோன்றியது.

காதல், காமம், பெண்கள்
இவையே அவரது சனிகிழமை உபதேசங்களில் இருக்கும்.
துணைகளில்லாத வாழ்க்கையின் சூன்யமே இராமசாமியாகி என் எதிரில் இருப்பதாக தோன்றும்.
ஒரு போதும் அவரது முகம் அதை பிரதிபலித்ததில்லை.

உலகத்தின் மிக மகிழ்வான மனிதன் நானே என்பது போன்ற கர்வத்தை அவர்
முகத்தில் சூடிக்கொண்டிருப்பார்.

மீண்டும் பூனையின் உறுமல்.

--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--

நான் வாங்கிவந்த மாமிச துண்டை, நான் அசந்து இருக்கும் நேரத்தில் அது அபகரிக்கும்வரையில்
எனக்கும் பூனைக்கும் எந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனையும் இருந்ததில்லை.
அதன் பிறகு ஒவ்வொரு நாளும் என்து கெரில்ல யுத்தத்தை அதனால் தவிர்க்கவே முடியாமல் போய்விட்டது.

குளித்துவிட்டு திரும்புகையில் அது கண்ணில் பட்டால் பக்கெட்டில் இருக்கும் நீரை அதன் மேல் தெளிப்பதில் தொடங்கி,
சிகரெட் துண்டு,தீக்குச்சி துண்டு கங்கை அதன் மேல் எறிவது என பலவகையான சாடிசத்தை வெளிப்ப்டுத்ததுவங்கியிருந்தேன்.

என்னை அது எதிர்கொள்ளும்போதெல்லாம் கோபம், பயம், இயலாமை என பலவகையான உணர்ச்சிகளை மியாவ்
என்ற ஒரே சத்ததிலேயே வெளிப்படுத்தி வந்தது.

ஒரு கட்டத்தில் எனது தாக்குதலை சமாளிக்க முடியாத அந்த பூனை அகதிகளாக வெளியேறின.
இராமசாமியை மீட்பராக கொண்டு பூனை மீண்டும் மேன்சனை வலம் வரும் வரையில் எனது சாடிசங்களை
ஒளிந்துக்கொண்டிருந்தன.

பாம்பின் நிறத்தில் ஒன்று, சாந்தின் நிறத்தில் ஒன்று,பாலின் நிறத்தில் ஒன்று என ஒவ்வொரு நிறத்திலிருந்தாலும்
எனக்கு பழைய பூனைக்கும் இவற்றிற்கும் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை.பூரணத்தில் இருந்து பூரணத்தை
பிரித்தெடுத்தாலும் மீண்டும் பூரணமே மிஞ்சும் என்பதைப்போல, அந்த பூனையில் இருந்து இந்த பூனைகள் வந்ததாகவே தோன்றியது.

பூனைகள் மேல் உள்ள வெறுப்பே கடைசியில் மிஞ்சியது.

--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--

ஆறாவது ராமசாமிக்கும் ஜார்ஜ்க்கும் ரகசிய உறவென்று மேன்சனில் பேசிக்கொள்வார்கள்.
பார்த்தவர்கள் யாருமுண்டா என்பதைப்பற்றிய எந்த குறிப்பும் இல்லை..
ஜார்ஜ் அந்த மேன்சனின் இரவு காப்பாளன். பகலில் சுமை கூலியாக இருந்துவந்தான்.

நெல்லையென்று சொன்ன நியாபகம். ஆனால் பேச்சில் மலையாள நெடி...

ஜார்ஜ் பற்றி மேன்சனில் இன்னொரு பாலியல் கதையொன்றும் உண்டு. சிலர் இதை நகைச்சுவை கதை என்பார்கள்.
அந்த கதையை கேட்கும் முன்னர் ஜார்ஜ் கண்ணில் பட்டாலே பேச்சு கொடுத்தாலோ எரிச்சலும் கோபமும் வரும்.
அத்தகைய முகவமைப்பும் பேச்சும் ஒரு சேர பெற்றிருந்தான்...

அவனைப்பற்றிய மற்றொரு பாலியல் கதை இதுதான். ஜார்ஜின் மனைவி கலாவோ கோகிலாவோ. இவனைவிட 2 வருடங்கள் மூத்தவள்.

3 மாதத்திற்கு ஒருமுறையே விடுப்பில் ஊர் செல்லும் வழக்கமுடையவன் ஜார்ஜ்..ஒரு வாரமிருந்து தங்கி புழங்கி முயங்கி
திரும்புதல் அவனது வாடிக்கை..
கடந்த முறை ஊருக்கு சென்ற போது (கடந்த முறை என்பது 6 மாதத்திற்கு முன்பு) வேறொரு ஆடவருடன்
அவளை கண்டிருக்கிறான். இப்படி அவன் கண்ணில் மாட்டியது இது முதல் முறை அல்ல.
முதல் முறை கண்டித்த அந்த வாரத்தின் நான்கு நாட்கள் அவனுடன் முயங்குதலை தவிர்த்திருக்கிறாள்.

நான் ஊர் திரும்பும் நாட்களில் மட்டும் வேண்டாம் என்று அவன் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிறகு
மிச்ச நாட்களில் அவனது தேவையை நிறைவேற்றிக்கொண்டு ஊர் திரும்பியிருக்கிறான்.

இதெல்லாம் அவனது ஊரைச்சேர்ந்த பக்கத்து மேன்சன் காப்பாளன் சொல்லி தெரிந்தது.
கடந்த முறை பயணத்தை 3 நாட்களுக்கு முன்பாகவே முடித்துக்கொண்டு திரும்பியிருந்தான் ஜார்ஜ்.
இந்த முறை அவனது இரண்டு வயது மூத்த மனையாள் யாருடனோ ஓடிவிட்டதாக கூறினான்
பக்கத்து மேன்சன் ஆசாமி..

அவனுடைய குழந்தைகள்?

தெரியலை.. அதையும் அவ ஓட்டிட்டு போயிட்டானுதான் நினைக்கிறேன்..

இந்த சம்பவத்திற்கு பிறகு அவனிடம் கோபம் வருவதில்லை.
ஆனால் அவன் என்னிடம் பேச்சு கொடுக்கும் போது வரும் எரிச்சலை கட்டுப்படுத்தமுடிவதில்லை.

பிலிப்பைனி கண்ணில் மாட்ட்மாட்டோம் என்ற தைரியத்தில் பூனை மீண்டும் உருமிக்கொண்டுதானிருந்தது

--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--

ஆறாவது ஹோமசாமி என்பார்கள் சில மேன்சன் வாசிகள்.
ஆரம்பத்தில் புரோகித ஆசாமியார் என நினைத்துக்கொண்டேன்..

இரவு 11 மணிக்கு தாகசாந்தி செய்ய வேண்டும் என ராமசாமி நினைத்தாலும்
அவர் கேட்டது கிடைக்கும். ஜார்ஜ் புண்ணியத்தில். இதுவே இவர்களின்
நெருக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஜார்ஜ் அருகிலிருக்கும் டாஸ்மாக்
பணியாளனுடன் நட்புக்கொண்டிருந்ததன்(ஊர் நண்பனாம்) பலன்.

மேலும் மாதம் ஒரு நாள் எண்ணை தேய்த்து குளிக்க உதவுவது. அப்படியொரு திருநாளில்
கண்ட இடத்தில் கைவைத்து தேய்த்ததை யாரோ பார்த்த பிறகுதான் ராமசாமி
ஹோமோசாமியாகியிருக்கிறார்.

இந்த ஆறுமாதத்திற்கு முன்பு அவர்களுக்குள்ளான பழக்கம்
தற்சமயம் கொஞ்சம் அதிக அந்நியோனிய பிடிப்புடன்
பழகுவதுப்போல பட்டது..

ராம்சாமியில்லாத நாட்களில் பூனையும் ஜார்ஜ்ம் எலியும் பூனையுமாக
இருப்பார்கள்.அதுக்கும் இவனுக்கும் எதோ ஒரு விடயத்தில்
பொறாமையிருந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

இப்போது தூரத்தில் பூனை உருமுவது போல மெல்ல மெல்ல
காற்றில் கரைந்து காணாமல் போனது. மீண்டும் உறக்கம்....

--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--o--

காலையில் மேன்சன் கொஞ்சம் பரபரப்பாக இருப்பது போல பட்டது.
இரண்டு மூன்று காக்கிச்சட்டைகள் உலாத்திக்கொண்டிருந்தார்கள்...

மெல்ல காலைகடன்களை முடித்தபிறகு அருகில் இருந்த டீ கடையை நெருங்கியபோது
நண்பகலைத்தொட்டிருந்தது...

பாஸ் ஒரு டீ. ஒரு கிங்ஸ்...

அண்ணே அந்த கிழவர் உங்க ரூம் எதுக்காலதானே...

எந்த கிழவர்...

சார்சு புருசன்ணே.. என்றபடி இளித்தான்..

ம்ம். மட்டும் சொல்லி வைத்தேன்

அந்த ஆளு இரண்டு நாள் முன்னாடி செத்து போயிட்டாரு,

செத்துட்டாரா.. எப்படி என்னாச்சு

நடுரோட்டிலே எங்கயோ போறச்சே ஹார்ட் அட்டாக்காம்...
யாரோ ஆசுபத்திரியிலே சேத்திருக்காங்க...
அங்கேயே உயிரு போயிடுச்சாம். இரண்டு நாளா போலிசு தேடி
இன்னிக்கிதான் கண்டுபிடிச்சாங்க அவரு ரூம..

பாவமே. அவருக்கு சொந்தம்னு...

ஒண்டிகட்டை... அநாதை பொணம்தான். அவங்களே பாத்துப்பாங்க

மேலும் இதைப்பற்றி பேச விருப்பமில்லாமல்
தினத்தந்தியை மேய்ந்த பின் அறை திரும்பினேன்

வாசலில் ஜார்ஜ் நின்றுகொண்டிருந்தான்.

முகத்தில் சோகம் தெரிந்தது.
அருகில் அந்த பூனை...

அழகாய் கொட்டாவி விட்டுக்க்கொண்டிருந்தது

(முற்றும்)

4 comments:

  1. வில்லன்,

    உங்களுக்குள் இப்படி ஒரு திறமையா!

    ReplyDelete
  2. கவுண்டமணி செந்தில்கிட்ட சொல்ற மாதிரி இருக்கு.

    //இந்த ஆடுமேய்க்கிற பையனுக்கு இம்புட்டு அறிவா//

    ReplyDelete
  3. பூனை மேட்டரை படிக்கும் போது சிரிப்பை கட்டுப்படுத்த முடியலை. சில்லறை மேட்டருக்கு இலக்கிய நடையை பயன்படுத்துவதில் கலைஞருக்கு அடுத்து நீர்தானும் ஓய்.

    --
    ஸ்ரீமூர்த்தி

    ReplyDelete
  4. மாப்ள, ரொம்பவே ரசிச்சேன்... அழகா எழுதியிருக்கீங்க....

    ReplyDelete