Thursday, July 14, 2011

ஜெ.ஜெ சில குறிப்புகள் - 2

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....


இது போல நடக்கும் என்று நினைத்ததுதான் என்றாலும் நண்பரை உதாசீனம் செய்ய முடியவில்லை. நான் அவரை சந்தித்த நேரம்

இரண்டு ரவுண்டுகளை முடித்திருந்தார். பொதுவாக எனக்கு டாஸ்மாகும் அதன் பார்களும் சுத்தமாக பிடிப்பதில்லை. அதுவும் இரண்டாம்தர டாஸ்மாக்குகள் விக்ரவாண்டி இரவு பேருந்து நிறுத்த கழிப்பிடத்தில் நுழைந்தது போன்று பயங்கர தோற்றமளிக்கும்.

நண்பர் அருத்திய புட்டியில் கார்டினாலோ பாலிடாலோ எதோ ஒன்று எழுதியிருந்தது.என்னிடம் எந்த ப்ராண்ட் வேண்டும் என்று கேட்காமலே சர்வாதிகாரமாக எனக்கும் ஒன்று ஆர்டர் செயய போனார். எனக்கு பழக்கமில்லை என்று சொல்லி தப்பித்திருக்கலாம். ஆனால் சென்ற மாதம் அவரது கல்யாணத்திற்காக மதுரை சென்ற போது விடிய விடிய ஆட்டம் போட்டு கடைசியில் மதியம் 12 மணிக்குதான் மண்டபத்திற்கே சென்றோம்.அது அவருக்கு தெரியும் என்பதால் இந்த காரணத்தை சொல்லி தப்பிக்க முடியாது.

எனது பிரச்சனை பாரும் ப்ராண்டும்தான் என்பதை அவரிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்று தெரியவில்லை. இது போன்ற மூத்திரசந்த்தில் எனக்கு அமர்ந்து பழக்கமில்லை என்று சொல்லியிருக்கலாம், அது அவரது ஈகோவை எதும் பதம் பார்த்துவிடுமோ என்ற பயத்தில் சொல்லவில்லை.

பகார்டி, மேஜிக் மூவ்மெண்ட்ஸ் இதுபோன்ற இரண்டாம்தர டாஸ்மாக்களில் கிடைப்பது கிடையாது. பகார்டியில் லைமும், மேஜிக் முவ்மெண்ட்ஸில் Apple Fizzம் கலந்து குடிக்கும் சுகமே அலாதியானது. எலுமிச்சை பழசாறு, ஆப்பிள் பழசாறு குடித்தது போல இருக்கும். குறைந்தபட்சம் சிக்னேட்சர், மார்ப்பியஸ் என்றால் கூட பரவாயில்லை.

எம்சி என்றாலே குமட்டும். கார்டினல் என்றால் வெளியேவே வந்துவிடும் அபாயமிருக்கிறது.

கையில் ஒரு பேனாகுச்சி ஒன்றுடனும், கிழித்த சிகரட் பாக்கெட் ஒன்றுடனும் வந்த 50வயது மதிக்கதக்க 40 வயது ஆசாமியிடம் சிகரெட் மற்றும் சைட் டிஷ்கள் சில (என்னத்த பெரிய சைட் டிஷ் சென்னா மசாலா என்றழைக்கப்படும் முக்கடலை சுண்டல்தான்) சொல்லிய பின் நான் வோட்கா என்ன ப்ராண்ட்ல இருக்கு என்று கேட்டது அவருக்கு முதலில் விளங்கவில்லை.

ஏதோ அவரது சகோதிரிகளை மானபங்கம் செய்யும் வார்த்தையை கூறியது போல எதோ கவனிப்பில் குறை வைத்துவிட்டோமோ என்று மிரண்டார். 50வயது ஆசாமி 25வயது ஆசாமியிடம் மிரள்வதை என்னால் சகிக்கமுடியாது என்பதால் எந்த விசாரணையும் இன்று எம்சி என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.

அதற்குள் 3வது ரவுண்டை முடித்திருந்த நண்பர். என்னதான் நண்பர் என்றாலும் என்னைவிட குறைந்தது 10-12 வருட வித்தியாசம் எங்களிருவருக்கும்.தலையில் கறுப்பும் வெள்ளையுமாக இருந்தார். அடந்த பட்டையான மீசையிலும் வெள்ளை நிறம். காதுகளில் முடி வளரவில்லை ஒரு வேளை வளர்ந்திருந்தால் அங்கும் வெள்ளை முடி முளைத்திருக்கலாம்.

ஆனால் சுறுசுறுப்பில் அவரை மிஞ்ச என்னால் முடியாது.

சிகரெட் பிடித்துக்கொண்டே தேனாம்பேட்டையில் இருந்து தேவநேய பாவணர் அரங்குவரை நடந்தே சென்றுவிடுவார், பாவணர் அரங்கில் நடக்கும் போன வந்த லொட்டு லொசுக்கு என்று எந்த இலக்கிய கூட்டமென்றாலும் இப்படி போவதே அவரது வழக்கமாக இருந்தது.ஒருமுறை சுஜாதா விருது விழாவிற்காக இப்படி அவருடன் சென்ற(நடந்த) கொடுமையும் உண்டு.
அரங்கில் நுழையும் முன்பே மழையில் நனைந்தது போல் தொப்பலாக நனைந்திருந்தேன்.

இப்படி ஒரு வகையில் அவரிடம் மாட்டினாலும் டென் டௌனிங், சாரா டப்பாசா, வெஸ்ட் மினிஸ்டர் பார்களுக்கு அழைத்து செல்வதும் அவர்தான். இங்கே இதை குறிப்பிடகாரணம் கார்டினல் & நடைபயணம் என்பது சேமிப்பு காரணமல்ல என்று விளக்குவதற்காக என்பதை புரிக... டென் டௌனிங், சாராடப்பாசா, வெஸ்ட்மினிஸ்டரை அறியாதவர்கள் அவை நகரின் பிரபலமான பார்கள் என்பதை அறிக.

நண்பர் சந்தோசமாக இருந்தால் மிடில், அப்பர் மிடில் & ஹை க்ளாஸ் பார்க்கும், கொஞ்சம் மனவருத்தத்துடன் இருந்தால் டாஸ்மாக் என்பதும் அவரது பாணி. இதை தெரிந்ததால்தான் என்னால் இந்த விக்ரவாண்டி புகழ் கழிப்பறை பாரில் உட்காரமுடியாத போதும் அவருடன் அமர்ந்தேன்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தீவிர இலக்கிய வாசகர்கள் இதுவரை கதையில் கதை சொல்லியின் வயது 25 என்றும் அவரது நண்பரின் வயது 25+10 or 12 என்பதும், அவருக்கு திருமணமாகி ஒரு மாதமாகியுள்ளது என்பதை கதையின் போக்கில் உணர்ந்திருக்ககூடும். இந்த நேரத்தில் வாசகர்கள் மனஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தினத்தந்தி டைப் கேள்விகள் என்னவாக இருக்க கூடும்?.


1. ஆரண்யகாண்டம் ஜாக்கி ஷெராப் போன்று டொக்காகியிருக்கலாம்.

2. பெண் வெளித்தொடர்பு கொண்டவள் என்பதை ஜாக்கி (நண்பரை இனி ஜாக்கி ஷெராப் என்போம்) ஷெராப் அறிந்திருக்கலாம்.

3. முதல் காரணத்தைவிட இரண்டாவது காரணம்தான் பலரால் விரும்பப்படுகிற செய்தி என்கிறார் பத்திரிக்கை ப்ரூப் எடிட்டர் ஒருவர்

4. மூன்றாவது ஒரு காரணம் இல்லையென்றாலும் அதற்கு 3. எனக்கொடுக்கப்பட்டிருப்பது சும்மா ஒரு இதுக்குத்தானெ தவிர அதில் எந்த பின்நவீனத்துவமும் இல்லை.

5. ஜாக்கி ஷெராப்பின் மனைவிக்கு அதில் விருப்பம் இல்லை. (100க்கு 0.05விழுக்காட்டினரே இப்படி நினைப்பார்கள் என்று ஷாலினி போன்று வேறொரு பெண் சொல்கிறார்.

6. ஷாலினி என்பது அஜித் மனைவி அல்ல. அதுவொரு பெண் மனநல மருத்துவர் என்பதை 100ல் 100பேர் அறிவார்கள் என்கிறார் சர்வே ஸ்பெசலிஸ்ட் நண்பரொருவர்.

7. அந்த பெண்ணை பற்றி ஜாக்கி ஷெராப்பிற்கோ/ஜாக்கி ஷெராப்பற்றி அப்பெண்ணிற்கோ மொட்டை கடிதாசி வந்திருக்கலாம்.

8. இதற்கு மேல் காரணம் எழுத பிடிக்கவில்லை இத்தோட நிறுத்திக்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


என் மனதில் 7-8 காரணங்கள் ஓடினாலும் எதைப்பற்றியும் கேட்க விரும்பவில்லை. அவரே ஆரம்பிக்கட்டும் என்ற மனநிலையில் எனக்கு கொண்டு வந்து வைத்த எம்சியை திருகி இரண்டு ரவுண்ட் முடித்தேன்.

இதற்குள் அவரும் 4 ரவுண்ட்களை முடித்து 5வது ரவுண்டின் பாதியில் இருந்தார். அவரைப்போல எனக்கு இந்த கண்றாவிகளை சிறிது சிறிதாக அருந்த பிடிக்காது. முடியாது.

ஒரே லப்க்க்க்க்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் சினிமா, அரசியல், பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ஆசாமி, பிடித்த உணவுவகைகள், எங்கே வித்தியாசமான டிஷ்கள் கிடைக்கும் போன்றவைகளை பேசிக்கொண்டு இருந்தோமே தவிர, கல்யாணம் ஆன ஒரே மாதத்தில் டாஸ்மாக் வந்தார் என அவரும் சொல்லவில்லை நானும் கேட்கவில்லை.

பில் செட்டில்மெண்ட் வரை வந்தபின்பும் அவரிடம் இருந்து எந்த புலம்பலும் இல்லாதது மற்ற நேரமாக இருந்தால் சந்தோசமாக இருந்திருக்கும் என்றாலும் இன்று மனதை அரித்துக்கொண்டே இருந்தது.


கடைசியில் பில் செட்டில் செய்த பின்பு மீண்டும் ஒரு கட்டிங் போடுகையில் விசயத்தை சொல்லிவிட்டார், அவர் மேல் எரிச்சல்தான் வந்தது,


வேறொன்றும் இல்லை அவரை அவசரமாக சவூதி போகச்சொல்லிருக்கிறார்கள் எங்கள் அலுவலகத்தில். நீண்ட்ட வருடங்களுக்கு பிறகு திருமணமானதாலும், மனைவியை கூட கூட்டிச்செல்ல இயலாதகாரணத்தினாலும்,

சிற்சில காரணங்களினாலும் அவர் சவுதி செல்ல விரும்பவில்லையென்றும் மாறாக என்னை சவுதி செல்ல சொன்னார் என்பதுமே அந்த எரிச்சலுக்கான காரணம்



பின்குறிப்பு 1:


நிறைய பக்கங்களை கொண்ட நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன், அதன் நடு அத்தியாயங்களில் ஒரு அத்தியாயம் இந்த கதை.

பின்நவீனத்துவ கதையில் ஒரு அத்தியாயமாவது ஆபாச சொற்கள் இல்லாமல் எழுத முடியுமா என்று கேட்ட சக எழுத்தாள நண்பருக்காக எழுதிய அத்தியாயமிது.

பின் குறிப்பு 2:

இந்த கதையை நான் பண்புடன் போட்டிக்கு அனுப்பியிருந்தால் பரிசு கிடைத்திருக்குமா என்று சுபைரிடம் தனிமடலில் வினவினேன்! அவன் பதில் அனுப்பவே இல்லை.

ஒரு வேளை இது ஸ்பாம் மடலாகியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.


பின் குறிப்பு 3:



நோ கமெண்ட்ஸ்

No comments:

Post a Comment