Saturday, April 30, 2011

ஜெ.ஜெ சில குறிப்புகள்

சுவரொட்டியை கண்டுபிடித்தவர்கள் யார்? எந்த வருடமாக இருக்கும் என்ற வரலாற்றையெல்லாம் ஆராய விருப்பமில்லையெனிலும் சுவரொட்டிகளையும் சுவரொட்டிகளில் வீற்றிருப்போரையும் ஆராய்வது இயல்பாகிப்போனது.

தமிழகத்தில் மட்டும்தான் இந்த சுவரொட்டி கலாசாரம் இருக்கவேண்டும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை.

ஒருசில தனியார் மற்றும் விஐபி வீட்டு சுவர்களைத்தவிர பெரும்பாலான சுவர்களை இந்த சுவரொட்டிகள் இடம்பிடித்துவிடுகின்றன.

ஆரம்பக்காலங்களில் சுவாரஸ்யமானவை பட சுவரொட்டிகள். ரஜினிகாந்த், விஜயகாந்த் சுவரொட்டிகளை ரசிக்கும் வயதை தாண்டியதும் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தும் அதைச்சுற்றி ஒரு வட்டமுமிட்ட சுவரொட்டிகள் அந்தப்பருவத்தில் கிளர்ச்சியையும் சுவாரஸ்யத்தையும் கொடுத்தன.

ஒரு சில படங்களுக்கு சென்று வந்ததும், சுவரொட்டிகளுக்கு பின் என்ன என்பதையும் அறியமுடிந்ததாலோ என்னவோ அந்த சுவரொட்டிகளும் சுவாரஸ்யத்தை இழந்துவிட்டன.

பெரும்பாலும் தேர்தல் காலங்களில் எதிர்கட்சியினரின் ஊழல்களை பாரீர், எங்களின் சாதனைகளை பாரீர் வகையறா சுவரொட்டிகளையும், வெற்றிகரமாக இரண்டாவது நாள் சினிமா சுவரொட்டிகளையும் விட தனி நபர்களின் சுவரொட்டிகள் தற்காலத்தில் சுவாரஸ்யமானவை.

பிறந்தநாள் கொண்டாட்ட சுவரொட்டிகளை காணும் போது அந்த நபர் தனது பிறந்தநாளுக்கு என்ன செய்திருப்பார், நண்பர்களுடன் இரவு விருந்துண்டிருப்பாரா அல்லது ஏதேனும் அமைப்பிற்கு நிதி உதவி அல்லது அன்னதான உதவியேதும் செய்திருப்பாரா என்று கற்பனைகள் ஓடும்.

அஞ்சா நெஞ்சன், ரத்தீஷ், கார்த்திக் சிதம்பரம் வகையறாக்கள் பொதுமக்கள் வகையில் சேரமாட்டார்கள் என்ற போதும் அவர்களை சுதிபாடி எழுதப்படும் வாசகங்களும் சுவாரஸ்யமானவையே.

நாடோடிகள் படத்தில் சொல்லப்படுவதைப்போல அந்த சுவரொட்டி மற்றும் ப்ளெக்ஸ் டிசைன் செய்ய கண்டிப்பாக 5 பேர் கொண்ட குழு இருக்கும் என்றுதான் தோன்றும்.

இன்னாரின் மகளாகிய டேஷ் டேஷ் பெண்ணிற்கு ஒரு நாளைகுறிப்பிட்டு இந்த நாளில் மஞ்சள் நீராட்டு விழா என்ற சுவரொட்டிகள் முதல் மரணச்செய்திகளை தெரிவிக்கும் சுவரொட்டிகள் வரை பல பல சுவரொட்டிகள் தினம் தினம் கண்ணில் தென்படுவது வாடிக்கையாகி விட்டன.

இதில் சுவாரஸ்யமானது என்ற சாடிசத்தை விட அவர்கள் என்ன ஆனார்கள் ஆகியிருப்பார்கள் என யோசிக்க வைப்பவைகளாக மரண சுவரொட்டிகள் இடம்பெறுகின்றன.

ஆட்டோ டிரைவர்கள் ஓட்டியிருந்த சுவரொட்டியில் இடம்பெற்ற 1959ல் பிறந்து 2011ல் இறந்த 52 வயதான ஆட்டோ டிரைவர் செல்லமுத்துவின் மறைவால் வாடும் அவர்களது
குடும்பத்தினரான முத்தம்மாள், அவர்களது இரண்டு பெண் குழந்தைகளான ரேவதி, சங்கரி இந்த மூவரின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்.

அந்த பெண்களுக்கு என்ன வயதிருந்திருக்கும், அவர்கள் படித்திருப்பார்களா, சொத்து இருந்திருக்குமா, ஆட்டோ ஓட்டிகளுக்கு என்ன பெரிய சொத்து இருந்திருக்க முடியும்.

அந்த முத்தம்மாவால் இருவருக்கும் திருமணம் செய்து தர முடியுமா, அந்த குடும்பம் இது போன்ற அகாலமரணம் ஏற்படும் என முன்னரே அறிந்து அதை சந்திக்கும் துணிவிருப்பவர்களாக இருப்பார்களா இல்லையா என பல கேள்விகள் பார்த்த அந்த நிமிடங்களில் ஓடும்…

சென்ற வாரம் மறைந்த ராஜ்குமாருக்கு அதில் இடம்பெற்ற பிறப்பு இறப்பு வருடங்களை வைத்து கணக்கிட்டால் வயது 32 தான்.

நல்ல வேளை அவரது பிரிவால் வாடும் அவரது மனைவிக்கு ஒரே ஒரு பெண் குழந்தைதான். மற்றொன்று ஆண். அந்த குழந்தைகளுக்கு மிஞ்சிப்போனால் 10வயதாகி இருக்கலாம்,
அவர்களுக்கு தந்தையின் மரணம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்.

அவரது தந்தை அன்பானவராக அக்குழந்தைகளிடம் இருந்திருப்பாரா அல்லது ஒரு பிடிவாதமான கண்டிப்பான தந்தையாக இருந்திருப்பாரா.

அன்பை இழந்த அக்குழந்தைகளின் மனநிலை அல்லது கண்டிப்பான தந்தை இனி இல்லை என்ற மனநிலை அல்லது இவற்றைத்தாண்டிய \மனநிலையை அக்குழந்தைகள் இந்த வயதில் எப்படி சமாளிப்பார்கள்.

32 வயதானவரின் மனைவிக்கு அதிகபட்சமாக 30 இருக்கலாம். அந்த இளம் கைம்பெண்ணின் நிலை என்னவாக ஆகும். அவ்விரு குழந்தைகளையும் அவளால் சமாளிக்கும் பக்குவம் பெற்றவளாக இருப்பாளா? சுவரொட்டி அக்குடும்பத்தினரால் இறந்தவரின் தந்தையரால் ஒட்டப்பட்டதாக அதிலிருந்த குறிப்பு சொல்வதால் நிச்சயம் பண தட்டுப்பாடு உள்ளக்குடும்பமாக அது இருக்காது என்பது ஒரு வகையில் ஆறுதலாக இருந்தாலும், 30 வயது இளம் கைம்பெண்ணின் நிலை அடுத்து என்ன?

இரண்டாம் திருமணம் செய்வாளா? அதை அக்குழந்தைகள் எப்படி எடுத்துக்கொள்ளும்? அவர்களுக்கு அது புரியுமா? இரண்டாம் திருமணத்திற்கு ஏற்ற அங்க லட்சணம் இல்லாதவளாக இருந்தால்?
சொத்துபத்து அவள் பேரில் இல்லாமலிருந்தால்?

இனி அந்த பெண்ணின் நிலை என்ன? இயற்கையான செக்சுவல் எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவாள்? இரண்டாவது திருமணம் என்ற குறைந்தபட்சம் சமூதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டவைகளுக்கும் வக்கில்லாதவளாக இருந்தால் எப்படி கட்டுப்படுத்துவாள்?

வேறு வழி காண்பாளோ? அது அவள் குழந்தைகளை பாதிக்குமா? ஒரு வேளை கணவரின் தந்தையால் அது கண்டறியப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவாளா, தனது நோக்கத்திற்கு இடைஞ்சல் என கருதி அவரை கொலை செய்ய முற்படுவாளா?

ஒரு ஆணிடன் தொடர்பு ஏற்படுமேயேனால் அதை அக்குழந்தைகள் உணரும் வயதை அடையும் போது என்ன நினைப்பாள்? அவளின் பெண் குழந்தையின் எதிர்காலம் இதனால் பாதிக்கப்படுமா அல்லது கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி ஒரு வித மனநிலையால் பீடிக்கப்பட்டு தனது வருங்கால மருமகளை கொடுமைப்படுத்தும் மாமியாராக மாறூவாளா?

இதையெல்லாவற்றையும் விட தற்கொலை செய்து கொள்வாளா என பல பல கேள்விகள் எழுந்தாலும் எல்லாவற்றையும் சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றி மறக்கடித்துவிடுகிறது.

(சேரமான் வில்லன் நூலின் 745ம் பக்கத்திலிருந்து)

2 comments:

  1. obituary columnla age mattum parthutu i used to cross, ippde veetu alugala pathi yocichathu illa, inimae spark agum appdinu ninaikiraen

    ReplyDelete
  2. என் ப்ளாகுக்கு வந்த முதல் ஆள் நீங்க, உங்களுக்கு இதுக்காக கம்பெனி சிறப்பு விருது தரப்போகிறது,

    ReplyDelete